வால்பாறையில் நிரம்பி வழியும் நீரோடைகள்
வால்பாறையில் தொடரும் மழையால் நீரோடைகள் நிரம்பி வழிகின்றன.
வால்பாறை
வால்பாறையில் தொடரும் மழையால் நீரோடைகள் நிரம்பி வழிகின்றன.
தொடரும் மழை
வால்பாறை பகுதியை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் தென் மேற்கு பருவமழை ஆகஸ்டு இறுதி வாரத்தில் இருந்து படிப்படியாக குறையத் தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியும் மழை குறையாததால் கடுமையான குளிர், பனிமூட்டம், மண்சரிவு, மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு என்று பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை தொடர்ந்து 58-வது நாளாக முழு கொள்ளளவில் உள்ளது. இதனால் சோலையாறு அணை கடல்போல் காட்சியளிக்கிறது.
சோலையாறு அணை
நேற்று காலை நிலவரப்படி சோலையாறு அணைக்கு வினாடிக்கு 1,950 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மின் நிலையம்-1 இயக்கப்பட்டும் சேடல்பாதை வழியாகவும், பரம்பிக்குளம் அணைக்கு 1,706 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 161.56 அடியாக இருந்து வருகிறது.
கேரள வனப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சோலையாறு மின் நிலையம்-2 இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு கேரளாவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது நிறுத்தப்பட்டு விட்டது.
நிரம்பி வழியும் நீரோடைகள்
தொடர் மழையின் காரணமாக வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள நீரோடைகள் நிரம்பி வழிகின்றன. வால்பாறை பகுதியில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்து வரும் நகராட்சி படகு இல்லமும் நிரம்பி வழிந்து வருகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மேல்நீராரில்-67 மிமீ மழையும், சோலையாறு அணையில்- 25 மிமீ மழையும், கீழ் நீராரில்-32 மிமீ மழையும், வால்பாறையில்-43 மிமீ மழையும் பதிவாகி உள்ளது.