ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்
போடிப்பட்டி,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்த காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நேற்று தொடங்கியது. மடத்துக்குளம் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் ஊராட்சி செயலர்கள் வரை அனைத்து தரப்பினரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் ஒன்றிய அலுவலகத்தில் ஒருசிலர் மட்டுமே பணியாற்றிய நிலையில் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அனைத்துவிதமான பணிகளும் முடங்கியுள்ளது. மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் செயலர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் வரி வசூல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.தேர்வுநிலை மற்றும் சிறப்புநிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும். உள்ளாட்சி தணிக்கை நடைமுறைகளில் பொருத்தமற்ற நடைமுறைகளை கைவிட வேண்டும். பணி ஓய்வு பெறும் நாளுக்கு முன்பு தணிக்கை தடைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ள இவர்கள் இன்று (வியாழக்கிழமை) வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர்.
-----------------