நீர்நிலைகளில் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடித்தால் கடும் நடவடிக்கை


நீர்நிலைகளில் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடித்தால் கடும் நடவடிக்கை
x
சேலம்

சேலம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீன்பிடி உரிமம்

இது தொடா்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மேட்டூர் அணை பகுதியில் மீன்வளத்துறையின் மூலம் மீனவர்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. உரிமம் பெற்றவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மீன்பிடித்து வருகின்றனர். வழிமுறைகளை பின்பற்றாத மீனவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மேட்டூர் அணை பகுதிகளை தவிர பிற பகுதிகளான காவிரி ஆற்றங்கரை, சரபங்கா நதி உள்ளிட்ட பல்வேறு நீர்நிலை பகுதிகளில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்களை பிடிக்க தூண்டில், மீன் வலைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். மேலும் நீர்நிலை பகுதிகளில் சிலர் சட்டத்திற்கு புறம்பான வகையில் வெடிமருந்துகள் அடங்கிய பொருட்களை பயன்படுத்தி மீன்களை பிடிப்பதாக தகவல் வரப்பெறுகிறது.

கடும் நடவடிக்கை

வெடி பொருட்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் யாரேனும் சட்டத்திற்கு புறம்பான வகையில் வெடிப்பொருட்களையோ அல்லது தடை செய்யப்பட்ட மீன் வலைகளையோ பயன்படுத்தி மீன் பிடித்தால் அவர்கள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் அனுமதியின்றி வெடிப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் சட்டத்திற்கு புறம்பான வகையில் மீன் பிடிப்பவர்கள் குறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணுக்கு அல்லது வருவாய் துறை அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.


Next Story