தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது கடும் நடவடிக்கை


தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Jun 2023 10:00 AM IST (Updated: 27 Jun 2023 10:01 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் வாகனங்கள் சட்ட விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர்

கலந்தாய்வு கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த 19-ந்தேதி அன்று 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்து குறித்தும், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது பெறப்படும் தொடர் புகார்கள் குறித்தும், தனியார் பஸ்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும் கடலூர் மற்றும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அஜாக்கிரதையால் விபத்து

கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் இயக்கம் தொடர்பாக தினந்தோறும் பல்வேறு புகார்கள் தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மீது பெறப்படுகிறது. கடந்த 19-ந்தேதி நடந்த பஸ் விபத்தும் டிரைவரின் அஜாக்கிரதையால் நடந்துள்ளது.

ஆகவே மாவட்டத்தில் பஸ் உரிமையாளர்கள் வருங்காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து பஸ்களை இயக்க வேண்டும். அதாவது, அரசால் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறி அதிவேகமாக பஸ்களை இயக்கக்கூடாது. வேக கட்டுப்பாட்டு கருவியை முறையாக பயன்படுத்த வேண்டும். மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதல் கட்டணம்

மேலும் அனுமதிக்கப்பட்ட தடத்தில் மட்டுமே பஸ்களை இயக்க வேண்டும். பயணிகளிடம் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அதிவேகமாகவும், சாலையில் செல்லும் பிற வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் பஸ்களை இயக்கக்கூடாது. அனுமதிக்கு புறம்பாக காற்று ஒலிப்பான்கள், பல்ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது.

டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பயணிகளிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். பஸ்கள் இயக்கம் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

இந்த கூட்டத்தின் மூலம் பஸ் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கும் முதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் அனுமதி சீட்டின் மீதும் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் உரிமத்தின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகவே கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படுவது குறித்து, அவ்வப்போது திடீர் வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி மோட்டார் வாகனங்கள் சட்ட விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் தனியார் பஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story