ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை


ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Sept 2023 2:30 AM IST (Updated: 17 Sept 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு, டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவிட்டார்.

நீலகிரி

ஊட்டி

ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு, டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவிட்டார்.

டி.ஜி.பி. ஆய்வு

நீலகிரி மாவட்டம் ஊட்டி பட்பயரில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் குடிமைப்பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை டி.ஜி.பி. வன்னியபெருமாள் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நீலகிரியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மாநில எல்லை சோதனைச்சாவடிகள் பற்றி போலீசாரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் டி.ஜி.பி. வன்னியபெருமாள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் இருந்து, கேரளா, கர்நாடகா மாநிலத்துக்கு செல்லும் வாகனங்களை சோதனை செய்து ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுக்க வேண்டும். ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

நீலகிரியில் பஸ்கள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில், தொடர்ந்து பஸ்களை தணிக்கை செய்ய வேண்டும். ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைப்பற்றபட்டு, தற்போது நிலைய பாதுகாப்பில் உள்ள 11 வாகனங்களை மாவட்ட வருவாய் அலுவலருடன் இணைந்து விரைந்து நடவடிக்கை எடுத்து ஏலம் விட வேண்டும்.

தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, கோவை சரக டி.ஐ.ஜி. கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் கக்கநல்லா, நாடுகாணி சோதனைச்சாவடிகளில் டி.ஜி.பி. வன்னியபெருமாள் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story