மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அசுத்தம் செய்த மர்ம ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அசுத்தம் செய்த மர்ம ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை
x

அன்னவாசல் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அசுத்தம் செய்த மர்ம ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என இலுப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கைவயல் தெருவில் ஆதிதிராவிட மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம ஆசாமிகள் சிலர் அசுத்தம் செய்த விவகாரம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேற்று முன்தினம் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது அங்குள்ள அய்யனார் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம், டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆதிதிராவிட மக்களை அழைத்து கோவிலில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும், இரட்டை குவளை முறையை பின்பற்றிய டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில் மேற்கண்ட சம்பவங்கள் குறித்து விசாரித்து தீர்வு காண்பதற்காக அந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூக மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்கள் பிரதிநிதிகளுடனான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் இலுப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. குழந்தைசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்களின் பிரதிநிதிகள் ஒரு தரப்பாகவும், அனைத்து சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் மறுதரப்பாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த சமாதான கூட்டத்தில் இறையூர் கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களை சேர்ந்த மக்களின் பிரதிநிதிகள் 26 பேர் பங்கேற்றனர். இதேபோல் மாவட்ட ஆதிதிராவிடர் துறை நல அலுவலர் கருணாகரன், குளத்தூர் தாசில்தார் சக்திவேல், புதுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அய்யனார் கோவில்

சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கூட்டத்தில் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்டதை மிகப்பெரிய குற்றமாக கருதி அது யாராக இருப்பினும் மேற்படி செயலை செய்தவர்கள் மீது போலீசார் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தர இருதரப்பினராலும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் வேங்கைவயல் கிராமத்தில் ஊர் பொது கோவிலாக அமைந்துள்ள அய்யனார் கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக நாள்தோறும் காலை மற்றும் மாலை என இருநேரங்களிலும் கோவில் மூலஸ்தான கதவு திறக்கப்படும் போது ட்ரம்செட் ஒலிக்கப்படும். அப்போது இருதரப்பினரும் சாமி கும்பிடுவதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும், தங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து சாதி, மதத்தினரும் ஒற்றுமையுடன் இருப்பதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதோடு திருவிழா, திருமணம் போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிப்பு செய்து கோவிலில் அனைவரும் ஒற்றுமையாக சாமிகும்பிட வேண்டுமென இருதரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இரட்டைகுவளை முறை

கிராமத்தில் உள்ள தேநீர் கடையில் இரட்டைகுவளை முறை இன்றி கிராமத்தில் அனைவரும் எவ்வித வேறுபாடு இன்றி அனைவரும் சுமுகமாக, சமமாக வாழும் நிலைக்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர். மேலும் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு மயானசாலை அமைப்பது, வீடு வழங்குவது போன்ற அடிப்படை வசதிகளுக்கு உரிய கருத்துகள் அனுப்பப்பட்டதாக அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் உறுதி அளிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவாக பல்வேறு சமுதாய மக்கள் ஒன்றுகூடி கிராமத்தில் எவ்வித சாதி, சமய வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பாக கிராமமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஏகமனதாக அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து சமூகங்களை சேர்ந்த இருதரப்பு பிரதிநிதிகளும் சம்மதம் தெரிவித்தனர். அதற்கு எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தையும் அவர்கள் அளித்தனர்.


Next Story