கஞ்சா, சாராயம் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
கஞ்சா, சாராயம் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாராயம் மற்றும் கஞ்சாவினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் வழிகாட்டுதலின்படி, வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில், ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் கிரண் ஸ்ருதி தலைமையில் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் சாராயம் மற்றும் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு 10 கஞ்சா வழக்குகளும், 50 சாராய வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ கஞ்சா, 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது :-
கஞ்சா மற்றும் சாராயம் விற்பனை போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடும் நபர்களை பற்றி மாவட்ட காவல் உதவி வாட்ஸ் அப் எண் 9677923100, மாநில காவல் உதவி வாட்ஸ் அப் எண் 9445463494, 9498111155 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும். மேலும் கஞ்சா மற்றும் சாராயம் கடத்தல், விற்பனை போன்ற சட்ட விரோத செயலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.