தமிழகத்தை போதைப்பொருட்களால் சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை-சரத்குமார் வலியுறுத்தல்


தமிழகத்தை போதைப்பொருட்களால் சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை-சரத்குமார் வலியுறுத்தல்
x

தமிழகத்தை போதைப்பொருட்களால் சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ச.ம.க. தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.

சேலம்

சூரமங்கலம்:

தமிழகத்தை போதைப்பொருட்களால் சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ச.ம.க. தலைவர் சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.

சரத்குமார் பேட்டி

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று மதியம் சேலம் வந்தார். அப்போது கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் சிலர் நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு பா.ஜ.க. தலைமை அவர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதை உலக அளவிலான செய்தியாக எடுத்துச் செல்ல வேண்டாம் என்பது எனது கருத்து, மதவாரியாக கருத்துகளை யாரும் பேசாமல் இருப்பது நல்லது.

பயிற்சி வகுப்புகள்

சென்னையில் விசாரணை கைதி மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேண்டுமென்றே நடந்த செயல் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சிலர் செய்யும் தவறு காவல்துறைக்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறது. காவல் துறையினருக்கு பல அழுத்தங்கள் இருப்பதால், உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் போலீசாருக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்.தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி என்பது பெரிய குற்றச்சாட்டு சொல்லும் அளவிற்கு இல்லை, மின்தடை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், அது மீண்டும் ஏற்படாமல் தடுக்க வேண்டும். சமத்துவ மக்கள் கட்சியை வலிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடும் நடவடிக்கை

தமிழகத்தில் பண அரசியலை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தவறு செய்பவர்களே திருந்தினால் மட்டுமே இதை தடுக்க முடியும், ஒருசிலர் செய்யும் தவறினால் இந்த சமுதாயம் சீர்குலையும் என்பதை பற்றி உணராமல் உள்ளனர். தமிழகத்தை போதைப்பொருட்களால் சீர்குலைக்கும் நபர்களை போலீசார் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில முதன்மை துணை பொதுச்செயலாளர்கள் சுந்தர், மகாலிங்கம், சேலம் மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜவஹர், மாவட்ட செயலாளர்கள் செங்கோடன், கோவிந்தன், கோவிந்தசாமி, மாநகர் மாவட்ட செயலாளர் மாதையன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story