ஓட்டல்களில் தகராறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை-உரிமையாளர் சங்கம் கோரிக்கை
ஓட்டல்களில் தகராறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டல் உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை மாவட்ட ஓட்டல்கள் உரிமையாளர் சங்க தலைவர் முருகன், போலீஸ் டி.ஐ.ஜி. துரையிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்தில் சமீப காலங்களில் ஓட்டல்களுக்கு வருபவர்களில் சிலர் பல்வேறு காரணங்களுக்காக தகராறு செய்து உரிமையாளர்களை தாக்கும் சம்பவம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காளையார் கோவிலில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு தகராறு செய்ததை சமரசம் செய்ய முயன்ற ஓட்டல் உரிமையாளர் கருப்பையாவை தாக்கியதில் அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரில் 3 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். ேமலும் ஒருவரை தேடி வருகின்றனர். இது போன்ற சம்பவங்களால் ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதோடு ஓட்டல்களில் தகராறு செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.