குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை-கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் ரவுடிகளின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று விசாரணை நடத்திய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
ரவுடிகளின் வீடுகளில் விசாரணை
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில் மாவட்டத்தில் ரவுடிகளின் செயல்பாடுகளை கண்டறியும் வகையில் போலீசார் 3 குழுக்களாக சென்று அவர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று நேற்று விசாரணை நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 30 பேர் அடங்கிய குழுவினர் நேற்று காலையில் திடீரென்று சங்குபேட்டை, திருநகர், ஆலம்பாடி ரோடு கோனேரிபாளையம் ஆகிய இடங்களில் வசிக்கும் ரவுடிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்கள் தற்போது என்ன தொழில் செய்து வருகின்றனர் எனவும், தங்களது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்கிறார்கள் எனவும் கேட்டறிந்தனர்.
ஆயுதங்கள் இருக்கிறதா?
மேலும் ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் இருக்கிறதா? என்று போலீசார் சோதனை செய்தனர். இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் நிருபர்களிடம் கூறியதாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 42 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 25 ரவுடிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 55 ரவுடிகள் நன்னடத்தை பிணை ஆணை பெற்று திருந்தி வாழ்கின்றனர். 32 ரவுடிகள் மீது நன்னடத்தை பிணையாணை பெறுவதற்காக ஆர்.டி.ஓ.வுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 4 ரவுடிகள் பிணையாணையை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட காரணத்தினால் அவர்கள் பிணை முறிவு ஆணை பெறப்பட்டு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர்.
18 ரவுடிகளுக்கு வலைவீச்சு
தலைமறைவாக உள்ள 18 ரவுடிகளை கைது செய்ய மாவட்ட போலீசார் மூலம் 3 தனிப்படை குழு அமைக்கப்பட்டு, அவர்களை வலைவீசி தேடி வருகிேறாம். மேலும் திருந்தி வாழும் ரவுடிகளின் வாழ்க்கைக்கு அரசால் உதவி செய்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். பெரம்பலூர் மாவட்டத்தில் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துதல், கட்டப்பஞ்சாயத்து, வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டுதல் போன்ற குற்றச்செயலில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருட்டை தடுக்க நடவடிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் திருட்டு, பெண்களிடம் சங்கிலி பறிப்பு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் நகர்பகுதியில் திருட்டை தடுக்க பொதுமக்கள் தங்களது வீடுகள் அல்லது தெருக்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.