கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் தலையிட்டால் கடும் நடவடிக்கை


கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் தலையிட்டால்  கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Dec 2022 1:13 AM IST (Updated: 30 Dec 2022 12:12 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர்

பொங்கல் பரிசு தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கல் பரிசுடன் கரும்பு

கடலூரில் நடந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் சுமார் 5,600 ஏக்கரில் பன்னீர் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இதில் கடலூரில் மட்டும் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரை, பச்சரிசியுடன் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், தற்போது மக்களின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்பில் பன்னீர் கரும்பும் சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து ரேஷன் அரிசி அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் பன்னீர் கரும்பும் வழங்கப்பட உள்ளது.

கலெக்டர் மூலம் கண்காணிப்பு

மேலும் பன்னீர் கரும்பை கொள்முதல் செய்வதில் கடந்த காலங்களில் இடைத்தரகர்கள் புகுந்து விளையாடினர். அதனால் தற்போது கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்களை தவிர்க்க மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

பன்னீர் கரும்புகள் எந்தெந்த பகுதியில் கொள்முதல் செய்யப்படும் என்பதை கூட்டுறவுத்துறை, வேளாண் துறை தான் முடிவு செய்யும். கரும்பு கொள்முதல் செய்வது கலெக்டர்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

உண்மையான விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும். பன்னீர் கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் தலையிட்டால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் போராட்டம்

எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்கிறதோ அப்போது மட்டுமே என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தது தொடர்பாகவும், தொழிலாளர் பிரச்சினை தொடர்பாகவும் போராட்டம் நடக்கிறது.

ஆனால் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் என்.எல்.சி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 லட்சமும், அதன் பிறகு இழப்பீடு தொகையை ரூ.15 லட்சமாக உயர்த்தியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இடையில் 10 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள், எதுவும் செய்யவில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் என்.எல்.சி. தொடர்பாக சட்டமன்றத்தில் பேசுவதற்கு கூட அனுமதி வழங்கப்படாமல் எங்களது குரல் வளைகள் நெரிக்கப்பட்டது.

ஆனால் தற்போது 3 முறை அனுமதி வழங்கியும், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பேசவில்லை. என்.எல்.சி. விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிப்பவர்கள் நாங்கள் அல்ல. மேலும் என்.எல்.சி. விவகாரத்தில் களம் மாறும் என்று, வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. பலமுறை நாங்கள் ஒன்று சேர்ந்து என்.எல்.சி. விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story