அனுமதிக்கு புறம்பாக பஸ்களை இயக்கினால் கடும் நடவடிக்கை


அனுமதிக்கு புறம்பாக பஸ்களை இயக்கினால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டை, புவனகிரி வழித்தடத்தில் அனுமதிக்கு புறம்பாக பஸ்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிச்கை விடுத்துள்ளார்

கடலூர்

சிதம்பரம்

பொதுமக்கள் புகார்

பரங்கிப்பேட்டை மற்றும் புவனகிரி வழித்தடத்தில் அனுமதி பெற்று இயங்கி வரும் பஸ்கள் அனுமதிக்கு புறம்பாக பரங்கிப்பேட்டை மற்றும் புவனகிரி வழியாக செல்வதற்கு பதில் புறவழிச்சாலை வழியாக இயக்கப்படுவதாகவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கடலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் விழுப்புரம் துணை போக்குவரத்து ஆணையர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அதிகாரி அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா மற்றும் ஊழியர்கள் திடீர் வாகன சோதனை நடத்தினர். தடம் மாற்றி இயக்கியதோடு, கூடுதல் கட்டணம் வசூலித்த 20 பஸ்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதாவது:-

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில்...

சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே இயக்க வேண்டும். அனைத்து பஸ்களிலும் வழித்தட வரைபடம், கால அட்டவணை மற்றும் கட்டண விவரம் ஆகியவற்றை பயணிகளின் பார்வையில் படும்வகையில் வைக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள பயண கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். பயணிகளுக்கு வழங்கப்படும் பயணசீட்டில் வாகனத்தின் எண், பயண கட்டணம், ஏறும் இடம், இறங்குமிடம் போன்ற தகவல்களை குறிப்பிட்டு பயணசீட்டு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை வழியாக இயக்கப்படும் பஸ்களில் வழி-புவனகிரி, வழி-பரங்கிப்பேட்டை என பலகைகளை வைக்க வேண்டும். மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story