பொதுவெளியில் கழிவுநீரை கொட்டினால் கடும் நடவடிக்கை


பொதுவெளியில் கழிவுநீரை கொட்டினால் கடும் நடவடிக்கை
x

பொதுவெளியில் கழிவுநீரை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரூர்

புகழூர் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் கனிராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், கசடு, கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், எந்திரம் மூலம் செப்டிக் டேங்க் சுத்தம் செய்வதை, தங்கள் பணியாளர்களிடம் உறுதி செய்யவேண்டும். பணியாளர்கள் செப்டிக்டேங்கில் இறங்கி சுத்தம் செய்வது, தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தவேண்டும்.

நகராட்சி மூலம் வழங்கப்பட்ட உரிமத்தை வாகனத்தின் முகப்பில் பொருத்தி வைக்க வேண்டும். வாகன போக்குவரத்தை கண்காணிக்கும் ஜி.பி.எஸ். கருவியை, எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும். செப்டிக்டேங்க் சுத்தம் செய்யும் வாகனம், நன்றாக வேலை செய்யக்கூடிய நிலையில் பராமரிக்க வேண்டும்.

வாகனங்களை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கழிவு நீர் வாகனம் என்பதை பதிவு செய்திருக்க வேண்டும், ஆறுகள், குளங்கள், கழிவுநீர் வடிகால்கள், திறந்த வெளியிடங்கள், பாதாள சாக்கடை தொட்டிகள் ஆகியவற்றில் கசடு, கழிவுநீரை கொட்டக்கூடாது. கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தில்மட்டுமே, கொட்டவேண்டும்.

கழிவுநீரை சேகரிக்கும் இடத்திலும், ஏற்றிச் செல்லும்போதும், அப்புறப்படுத்தும்போதும், சிறிதளவு கூட கசிவு இல்லாமல், சிந்தாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். பணியாளர்கள் பாதாள சாக்கடை அமைப்பு மற்றும் செரிமான தொட்டிக்கு உள்ளே நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பணியாளர்கள் மற்றும் டிரைவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். உரிமம் பெறாத வாகனங்கள் நகராட்சி பகுதிகளில் இயங்கினால் தகவல் தெரிவிக்க வேண்டும். எந்திரம் மூலம் செப்டிக்டேங்க் சுத்தம் செய்ய வேண்டும். பொதுவெளியில் கழிவுநீரை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், வாகனம் பறிமுதல் செய்யப்படும், என்றார்.


Next Story