பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை


பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை  - பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
x

பொதுக் கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது போலீசில் புகார் பதியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 943 இடங்களில் 7 ஆயிரத்து 590 இருக்கை வசதிகள் கொண்ட பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இந்த கழிப்பிடங்கள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது.

மேலும், சென்னையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.36 கோடி மதிப்பில் 366 இடங்களில் சிதலம் அடைந்த மற்றும் பயன்படுத்த உகந்த நிலையில் இல்லாத கழிப்பிடங்களை மறுசீரமைக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் புதிய பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்ட பணியின் கீழ் மேற்குறிப்பிட்ட 366 இடங்களில் 860 இருக்கைகள் கொண்ட கழிப்பிடங்களும், 620 இருக்கைகள் கொண்ட சிறுநீர் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்படும் பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களுக்கு எந்த கட்டணமும் இன்றி சேவையாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக புகார்கள் பெறப்பட்டன. இந்தநிலையில் மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களில் கட்டணம் இல்லா பொதுக்கழிப்பிடம் என பெயர் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் மீறி பொதுமக்களிடம் கட்டணம் வசூலிப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த 28-ந்தேதி, திரு.வி.க.நகர் மண்டலம் வார்டு-70-க்கு உட்பட்ட குளக்கரை இணைப்பு சாலை, மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் தேனாம்பேட்டை மண்டலம் வார்டு-125 காமராஜர் சாலையில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்த 3 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது போலீசில் புகார் பதியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story