பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சமத்துவ மக்கள் கழகத்தினர் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் சமத்துவ மக்கள் கழகத்தினர் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழக செயலாளர் அற்புதராஜ் தலைமையில் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், "தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவராக சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பொறுப்பேற்று பனை தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். கடலோர மாவட்டங்களில் ஒரு கோடி பனை மரங்களை விதைத்து மண் அரிப்பை தடுக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்தநிலையில் சிலர் பனைமரங்களை அனுமதியின்றி வெட்டி தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்து வருகின்றனர். ஆகையால் பனை தொழிலை பாதுகாத்திட பனைமரங்களை அழிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் ரவிசேகர், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் மில்லை எஸ்.தேவராஜ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், "தூத்துக்குடி பெரிய மார்க்கெட்டில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க வரும் வியாபாரிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லை. மாநகராட்சி சார்பில் அருகில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன காப்பகத்தில் நிறுத்துமாறு கூறுகிறார்கள். இதனால் வியாபாரிகள் பொருட்களை வாங்கி கொண்டு மூட்டைகளுடன் மாடியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஆகையால் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மார்க்கெட் அருகே வாகனங்களை நிறுத்தி பொருட்களை ஏற்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும்" என்று கூறி உள்ளனர்.