கந்துவட்டி புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
கரூர் மாவட்டத்தில் புதிதாக பதவியேற்று கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கந்துவட்டி புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
கரூர்,
புதிய போலீஸ் சூப்பிரண்டு
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சுந்தரவடிவேல் ராமநாதபுரம் கடலோர காவல் குழும சூப்பிரண்டாக மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக பணியாற்றி வந்த சுந்தரவதனம், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சுந்தரவதனம் பொறுப்பேற்று கொண்டார்.
பேட்டி
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தொழில்வளம் மிக்க கரூர் மாவட்டத்தில் தொழில்துறை சார்ந்த புகார்கள் வரப்பெற்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக கந்துவட்டி புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது பெருகிவரும் இணையவழி குற்றங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கணினி வழி குற்றங்கள் பற்றி மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, புகார்கள் மீது முழு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி போலீஸ் நிலையங்களை அணுக வேண்டும். போலீஸ் நிலையங்களில் குறைகள் இருந்தால் உயர் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ளலாம். 9498188488 என்ற எண்ணில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டையும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.