வருகிற 25-ந் தேதி ஒருநாள் கதவடைப்பு போராட்டம்


வருகிற 25-ந் தேதி ஒருநாள் கதவடைப்பு போராட்டம்
x

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் வருகிற 25-ந் தேதி ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு தீர்வு காண தொழில் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பூர்

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் வருகிற 25-ந் தேதி ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு தீர்வு காண தொழில் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொழில் கூட்டமைப்பினர்

தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான பீக்ஹவர் மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 25-ந் தேதி திருப்பூரில் ஒருநாள் தொழிற்சாலை கதவடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் நேற்று காலை நிட்மா சங்க அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள். இதில் திருப்பூரை சேர்ந்த பின்னலாடை தொழில்துறையினர் மற்றும் சிறு, குறு அனைத்து தொழில் அமைப்பினர் என 25 அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் டீமா தலைவர் முத்துரத்தினம், நிட்மா இணைச்செயலாளர் கோபி, டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

கதவடைப்பு போராட்டம்

இதுகுறித்து டீமா தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் தான் முக்கிய மூலப்பொருள். மின்சார நிலைக்கட்டணம் 430 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பீக்ஹவர் கட்டணம் 8 மணி நேரத்துக்கு கூடுதலாக 15 சதவீதம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை திரும்பப்பெற வேண்டும். 3ஏ1 இணைப்புக்கு பதிலாக 3பி இணைப்பு கட்டணம் வசூலிப்பதால் கூடுதல் தொகை செலுத்த வேண்டியுள்ளது. அதை 3ஏ பிரிவுக்கு மாற்ற வேண்டும்.

சூரியஒளி மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் அமைப்பினர் உள்ளிட்ட அனைத்து சிறு,குறு தொழில் அமைப்பினர் வருகிற 25-ந் தேதி ஒருநாள் தொழிற்சாலை கதவடைப்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். திருப்பூரில் 25 அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓட்டல், தியேட்டர் உரிமையாளர்கள், வணிகர்கள் இந்த கதவடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முதல்-அமைச்சர் வருகை

நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொங்கு மண்டலத்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு வாபஸ் என்று அவர் அறிவித்தால், நாங்கள் இந்த போராட்டத்தை கைவிடுவோம். இல்லாவிட்டால் 25-ந் தேதி மீண்டும் அடுத்தகட்ட போராட்டம் அறிவிக்கும் நிலை ஏற்படும். எங்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால் இதில் இருந்து பின்வாங்க மாட்டோம். மற்ற மாநிலத்தவர் தங்கள் மாநிலங்களில் தொழில் தொடங்க பல்வேறு சலுகைகளை வழங்கி எங்களை அங்கு அழைக்கிறார்கள். தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் உள்ள தமிழக முதல்-அமைச்சர் எங்களுக்கு நிரந்தர தீர்வு கொடுப்பார் என்று நம்புகிறோம்.

இந்த ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் ரூ.2 கோடி உற்பத்தி பாதிக்கும். சிறு, குறு நிறுவனங்கள் தமிழகத்தில் 90 சதவீதம் உள்ளன. இந்த தொழிலை பாதுகாக்க வேண்டும். அதுவரை அகிம்சை வழியில் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story