சேலம் மாவட்டத்தில்20 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் மின் கட்டணத்தை குறைக்க கோரி 20 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டன. இதன் மூலம் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளன.
சேலம்
சேலம் மாவட்டத்தில் மின் கட்டணத்தை குறைக்க கோரி 20 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டன. இதன் மூலம் ரூ.500 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளன.
வேலைநிறுத்த போராட்டம்
சிறு, குறு நிறுவனங்கள் மீது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும். தமிழக தொழில் கூட்டமைப்பு அறிவித்துள்ள 7 அம்ச கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சிறு, குறு தொழிற்சாலை சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. மாவட்டத்தில் சேலம் நெத்திமேடு, அயோத்தியாப்பட்டணம், தம்மம்பட்டி, கருப்பூர், ஆத்தூர், ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜவ்வரிசி ஆலைகள், ரெடிமேடு துணி உற்பத்தி நிறுவனங்கள், அரிசி, ஆயில், பருப்பு ஆலைகள் என சிறு, குறு தொழிற்சாலைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானமின்றி தவித்தனர். மேலும் வேலை நிறுத்த போராட்டத்தால் அங்கு வெறிச்சோடி காணப்பட்டன.
ரூ.500 கோடி வர்த்தகம் பாதிப்பு
இதுகுறித்து சிறு, குறு தொழிற்சாலை சங்க மாவட்ட தலைவர் கோவிந்தன், துணை தலைவர் இளங்கோவன் ஆகியோர் கூறியதாவது:-
மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. சில இடங்களில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 20 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
இதன் மூலம் ரூ.500 கோடி வரை வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே எங்களது கோரிக்கை தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. அதன்படி 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் நாளை (இன்று) சென்னையில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் எங்களது கோரிக்கைகள் குறித்து தெரிவிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.