ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்


ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
x

சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம்:

ரேஷன் கடை பணியாளர்கள்

5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 17 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும். சம்பள உயர்வு வழங்க வேண்டும். பொருட்கள் இருப்பு குறைவாக உள்ளது என்று காரணம் காண்பித்து ஊழியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்வதை நிறுத்த வேண்டும்.

மாதம் இறுதியில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம், ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து பொருட்களையும் அரசு பொட்டலமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து 2-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டம் தொடரும்

இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறும்போது 2-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் மாநகரில் சில கடைகளும், புறநகர் பகுதியில் பல கடைகளும் என மொத்தம் 450-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூடப்பட்டு உள்ளன. வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தற்போது சம்பள பிரச்சினை முக்கியம் அல்ல. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினர்.


Next Story