பெருந்துறை சிப்காட்டில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


பெருந்துறை சிப்காட்டில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை சிப்காட்டில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்த போராட்டம்

பெருந்துறை சிப்காட்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமையல் எரிவாயு நிரப்பும் (பாட்லிங் பிளான்ட்) இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், ஒப்பந்த அடிப்படையில் 72 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொழிற்சாலையின் அதிகாரி தொழிலாளர் ஒருவரை பணி சரிவர செய்யவில்லை என்று கூறி பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து மற்ற தொழிலாளர்கள் நேற்று காலை தொழிற்சாலை முன்பு திரண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கோஷமும் எழுப்பப்பட்டன.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார், பெருந்துறை போலீஸ் உதவி சூப்பிரண்டு கவுதம்கோயல், ஈரோடு நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் (பெருந்துறை), சரவணன் (சென்னிமலை), முருகானந்தம் (அறச்சலூர்) மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

தகவல் கிடைத்ததும் பெருந்துறை தொகுதி ஜெயக்குமார் எம்.எல்.ஏ. அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில செயலாளர் சின்னச்சாமி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தாலுகா செயலாளர் குப்புசாமி, பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அருணாச்சலம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உறுதி

அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து அந்த தொழிலாளியும், 'இனிமேல் தனது பணியில் கவனத்துடன் இருப்பேன்' என்று உத்தரவாத கடிதம் கொடுத்தார். இதையடுத்து, தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள். தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக தொழிற்சாலையில் கியாஸ் நிரப்பும் பணி நிறுத்தப்பட்டிருந்தது. போராட்டம் முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து தொழிற்சாலையில் மதியத்துக்கு மேல் எரிவாயு நிரப்பும் பணி தொடங்கியது.


Next Story