தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மார்ச் 28-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம்


தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மார்ச் 28-ந் தேதி வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2023 6:45 PM GMT (Updated: 26 Feb 2023 6:46 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மார்ச் 28-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் கூறினார்.

சிவகங்கை


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மார்ச் 28-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் கூறினார்.

மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சிவகங்கையில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அன்பரசு தலைமையில் நடந்தது.

பொதுச்செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில பொருளாளர் பாஸ்கரன், மாநில துணை தலைவர்கள் ஞானத்தம்பி, பெரியசாமி, பழனியம்மாள், கிறிஸ்டோபர், பரமேஸ்வரி, செல்வராணி, மாநில துணை பொது செயலாளர் மங்கள பாண்டியன், வெங்கடேசன், சீனிவாசன், வாசுகி, மாநில செயலாளர்கள் டேனியல் ஜெய்சிங், சுமதி, ஹேமலதா, அம்சராஜ், கோதண்டபாணி, குபேரன், சிவகங்கை மாவட்ட தலைவர் கண்ணதாசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் மாரி உள்பட மாநிலம் முழுவதையும் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் பொதுச்செயலாளர் செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தற்போது உள்ள அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது, முடக்கப்பட்ட சரண்டர் தொகையை விடுவிப்பது, அகவிலைப்படி வழங்குவது, 6 லட்சம் பணியிடங்களை நிரப்புதல் போன்ற எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

வேலை நிறுத்த போராட்டம்

அத்துடன் 20 மாத நிலுவை ஊதியம் வழங்குவது, சாலை பணியாளர்களுக்கு 41 மாதத்தை வேலைகாலமாக அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே ஊழியர் சந்திப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி ஆகிய மூன்று கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். இதுவரை முதல்-அமைச்சர் 6 முறை பேச்சுவார்த்தை நடத்தி பரிசீலிப்பதாக மட்டும் கூறியுள்ளார்.

எனவே எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மார்ச் 28-ந் தேதி தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதிலும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பட்ஜெட் கூட்ட தொடரின் போது கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். முதல்-அமைச்சர் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story