ஈரோட்டில் 6-வது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்: தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்- 500 டன் குப்பைகள் தேக்கம்


ஈரோட்டில் 6-வது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்: தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்- 500 டன் குப்பைகள் தேக்கம்
x

ஈரோட்டில் 6-வது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்தால் ஈரோட்டில் சுமார் 500 டன் குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் 6-வது நாளாக தொடரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த போராட்டத்தால் ஈரோட்டில் சுமார் 500 டன் குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன.

உண்ணாவிரத போராட்டம்

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்தம் அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். அதற்காக விடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 23-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6-வது நாளாக நேற்றும் இந்த போராட்டம் தொடர்ந்தது.

இந்தநிலையில் ஈரோடு காளைமாட்டுசிலை பகுதியில் தூய்மை பணியாளர்கள் நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்பிரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பிரபாகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தூய்மை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டு உண்ணாவிரதம் இருந்தனர்.

500 டன் குப்பைகள்

இந்த போராட்டத்தில் ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் கொடுப்பதை கைவிட வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.725 கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதுகுறித்து ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் ஏற்கனவே பணியாற்றும் தூய்மை பணியாளர்களில் பலருக்கு வேலை இழப்பு ஏற்படும். ஈரோட்டில் தினமும் 257 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. தற்போது நிரந்தர தூய்மை பணியாளர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் சிலர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் கடந்த 6 நாட்களாக நடத்திய போராட்டம் காரணமாக சுமார் 500 டன் குப்பைகள் அள்ளப்படாமல் தேக்கம் அடைந்து கிடக்கிறது.

எங்களது முக்கிய கோரிக்கையாக தனியாருக்கு ஒப்படைக்கும் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் அல்லது தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகள், தொழிற்சங்கத்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார கேடு

தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக வீடுகளில் குப்பைகளை சேகரிக்கும் பணி தடைபட்டு உள்ளது. இதனால் 2 நாட்களுக்கு மேல் வீடுகளில் குப்பைகளை வைத்து கொள்ள முடியாத மக்கள் வீதியில் வீசி செல்கின்றனர். ஈரோட்டில் பெரும்பாலான இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாமல் உள்ளதால், ரோட்டில் வீசப்படும் குப்பைகள் காற்றுக்கு பறந்து செல்வதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story