மின் கட்டண உயர்வை திரும்பப்பெறாவிட்டால் போராட்டம்
தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப்பெறாவிட்டால் போராட்டம் ஜி.கே.வாசன் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்களை பற்றி கவலைப்படாத அரசு என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது ஏழை எளிய மக்களை மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. சிறு,குறு தொழில் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும். விலைவாசி உயர்வதற்கான வாய்ப்பை இந்த அரசே ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இதற்கு முன்பு சொத்து வரியை உயர்த்தியதை நினைவு கூற விரும்புகிறேன். மக்கள் மீது சுமையை வைக்க விரும்புகிற தி.மு.க. அரசு மின் கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் .இல்லையென்றால் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விரைவில் போராட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கவலைக்கிடமாக உள்ளது. வெளியூர் செல்பவர்களின் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்து செல்லப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது அரசின் கடமை.. காங்கிரஸ் கட்சியில் ராகுல் தொடங்கி இருக்கும் பாத யாத்திரை அந்த கட்சிக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இன்றைக்கு தேவைப்படுகிறது. ஏனென்றால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கிறது. இந்த யாத்திரையால் நாட்டு மக்களுக்கும், கட்சிக்கும் எந்த விதமான நன்மை பயக்காது என்பது என்னுடைய கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.