தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 29 Oct 2022 6:45 PM GMT (Updated: 29 Oct 2022 6:47 PM GMT)

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நரம்பியல் துறைத் தலைவர் மருத்துவர் சவுந்தர்யா தலைமை தாங்கினார். நரம்பியல் துறை மருத்துவ உதவி பேராசிரியர் தாமஸ் எட்வின் ராஜ் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பக்கவாதம் என்பது ரத்த ஓட்டத்தில் ஏற்படும் திடீர் நரம்பியல் பற்றாக்குறை ஆகும். இதில் ரத்த ஓட்டம் குறைவால் ஏற்படும் பக்கவாதம், ரத்த கசிவால் ஏற்படும் பக்கவாதம் என 2 வகைப்படும். இதில் ரத்த ஓட்டம் குறைவால் 80 சதவீதமும், ரத்த கசிவால் 20 சதவீதமும் பக்கவாதம் ஏற்படுகிறது. திடீரென கைகால்களில் பலவீனம், பேச்சு தடை படுதல், புரிந்து கொள்வதில் சிக்கல், உடலில் ஒரு பகுதி உணர்ச்சியில்லாமல் போகுதல், நடையில் தள்ளாட்டம், குருட்டுத்தன்மை, தலைசுற்று அல்லது மயக்கம், கடுமையான தலைவலி, கோமா உள்ளிட்டவை பக்கவாதத்தின் முதற்கட்ட அறிகுறிகளாக உள்ளன.

குணப்படுத்த வாய்ப்பு

இந்த பக்கவாதம் ஏற்பட்டவுடன் ஒரு நிமிடத்திற்கு சுமார் 2 மில்லியன் நியூரான்கள் இறந்துபோகும், இதனால் அதைச் சுற்றியுள்ள பகுதி செயலிழந்து போகும் நிலை ஏற்படும். எனவே இந்த அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக சுமார் 4 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவரை கொண்டு சென்றால், உடனடியாக ரத்த ஓட்டத்தை சீர்செய்து பக்கவாதத்தை குணப்படுத்தலாம். குறிப்பாக சுமார் 90 சதவீத பக்கவாத நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு வராததால் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story