10 கி.மீ. தூரத்துக்கு கடல் பாசி வரைந்த கோடு


மாண்டஸ் புயலால் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் இருந்த நிலையில், கடலில் உள்ள பாசிகள் கரை ஒதுங்கி சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரையில் கோடு வரைந்தது போல் பாசிகள் கரை ஒதுங்கி கிடந்தன.

ராமநாதபுரம்

தனுஷ்கோடி,

மாண்டஸ் புயலால் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் இருந்த நிலையில், கடலில் உள்ள பாசிகள் கரை ஒதுங்கி சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரையில் கோடு வரைந்தது போல் பாசிகள் கரை ஒதுங்கி கிடந்தன.

கடற்கரை அலங்கரித்த பாசிகள்

வங்கக்கடலில் உருவாகி இருந்த மாண்டஸ் புயல் கரையை கடந்தது. புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்தது. கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசியது.

தனுஷ்கோடி தென் கடலானது வழக்கத்திற்கு மாறாக கடந்த 2 நாட்களாக கடும் சீற்றமாக காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் அரிச்சல்முனை முதல் முகுந்தராயர் சத்திரம் வரையிலான கடற்கரை முழுவதும் கடல் பாசி மற்றும் தாழை செடிகள் கடல்சீற்றத்தால் கரை ஒதுங்கி கிடக்கின்றன.

கடற்கரையில் நீ்ண்ட தூரத்துக்கு ஒரு கருப்பு கோடு வரைந்தது போன்று, இந்த பாசி மற்றும் தாழை செடிகள் காட்சி தந்தன. இது காண்பதற்கு வித்தியாசமாக இருந்தது. சுமார் 10 கி.மீ. நீளத்துக்கு பாசிகளால் உருவான இந்த கருப்பு நிற கோடு கடற்கரையை அலங்கரித்து இருந்தது. நேற்று தனுஷ்கோடி வந்த சுற்றுலா பயணிகள் இதை பார்த்து ஆச்சரியம் அடைந்ததுடன், அந்த காட்சியை தங்கள் செல்போன்களிலும் படம் பிடித்துக்கொண்டனர்.

மீன்பிடிக்க செல்லவில்லை

அதுபோல் 4-வது நாளாக நேற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்பட மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லவில்லை. புயல் கரையை கடந்த நிலையில் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது.

1 More update

Next Story