பார் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சார்பில் போராட்டம்
டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடை கண்டித்து 1-ந் தேதி சென்னையில் பார் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் கூறினார்
தேவகோட்ைட,
டாஸ்மாக்கில் நடைபெறும் முறைகேடை கண்டித்து 1-ந் தேதி சென்னையில் பார் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் கூறினார்.
உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், கட்டிட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் அன்பரசன் தேவகோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:- மது கூட உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்க துடிப்பவர்கள், அவர்களுக்கு உறுதுணையாக செயல்படும் சில டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளை கண்டித்து வருகிற 1-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில் முறைகேடுகளை தவிர்க்க வேண்டி சங்கத்தின் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது நீதிபதி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மதுக்கூடம் நடத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று தீர்ப்பளித்தார்.
அப்போது டாஸ்மாக் நிர்வாகம் எங்களது சங்கத்திடமும், மதுகூட உரிமையாளர்களிடமும் அரசுக்கு வருவாய் வேண்டி நீங்களும் ஒத்துழைத்தால்தான் மது கூடம் நடத்த முடியும் என கேட்டுக்கொண்டது. நாங்கள் ஒத்துழைப்பு அளித்ததால் டாஸ்மாக் நிர்வாகம் மேல்முறையீடு செய்து மதுக்கூடம் நடத்துவதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது என்று வாதிட்டு உத்தரவு பெற்றது. தொடர்ந்து கடந்த ஜூலை 18-ம் தேதி டெண்டர் நடைபெற்றது.
காலாவதி
இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து டெண்டர் முறையாக நடக்க வேண்டும், வக்கீல் குழு அமைத்து டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தோம். பின்னர் ஐகோர்ட்டு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், ஆனால் இறுதி செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.
எனவே, கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை எங்களுக்கு உரிமத்தை நீட்டித்து தர வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அனைத்து ஒப்பந்ததாரர்களுடைய உரிமமும் காலாவதி ஆகிவிட்டது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இந்த மாதம் முதல் அனைத்து மதுக்கூடங்களையும் மூடிவிட்டது.
அதிகாரிகளை கண்டித்து
முக்கிய பிரமுகர்களின் தரகர்களாக செயல்பட்டு ஒவ்வொரு கட்டிட உரிமையாளர்களையும், மதுக்கூட உரிமையாளர்களையும் சொல்வதை கேட்டு நடந்து கொள்ளுங்கள், இல்லையென்றால் மதுக்கூடம் நடத்த முடியாது. கேட்கும் தொகையை கொடுத்து விடுங்கள் என்று அழுத்தம் கொடுக்கின்றனர்.
எனவே, முக்கிய பிரமுகர்ளுக்காக செயல்படும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.