பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க கோரி போராட்டம்
திருவாடானையில் பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொண்டி,
திருவாடானையில் பயிர் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகள் கூட்டம்
திருவாடானையில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாததால் மாவட்டம் முழுவதும் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பயிர் பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் கலெக்டரை சந்தித்து வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் பயிர் பாதித்த பகுதிகளை கணக்கெடுக்க உத்தரவிட்டது. ஆனால் கணக்கெடுப்பு நடத்திய பின்னர் இதுவரை பயிர் பாதிப்பிற்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும் அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
எனவே தமிழக அரசு தமிழகத்தில் இரண்டாவது பெரிய அளவில் நெல் விவசாயம் நடைபெறக்கூடிய ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்படாதது மாவட்ட விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போராட்டம்
இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பயிர் பாதிப்பிற்கு உரிய நிவாரணம் அறிவிக்க வேண்டும், இல்லையெனில் வருகிற 20-ந் தேதி திருவாடானையில் திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம் வட்டார விவசாயிகள் மற்றும் மாவட்ட விவசாயிகள் சங்க அமைப்புகளை திரட்டி அரசு நிவாரணம் அறிவிக்கும் வரை காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் கவாஸ்கர் தம்பிராசு, ராஜா உள்பட ஏராளமான விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.