ஆப்பக்கூடல் அருகே பால் உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்; பசு மாட்டுடன் ஆர்ப்பாட்டம்


ஆப்பக்கூடல் அருகே பால் உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்; பசு மாட்டுடன் ஆர்ப்பாட்டம்
x

ஆப்பக்கூடல் அருகே பால் உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பசு மாட்டுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு

அந்தியூர்

ஆப்பக்கூடல் அருகே பால் உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பசு மாட்டுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் போராட்டம்

பால் உற்பத்தியாளர்களின் அதிகரித்து வரும் உற்பத்தி செலவை சமாளிக்க ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.35-ல் இருந்து ரூ.42 ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ.44-ல் இருந்து ரூ.51 ஆக கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். ஆவினுக்கு பால் வழங்கும் கறவையினங்களுக்கு ஆவின் செலவில் இலவச காப்பீடு வசதி செய்து தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கடந்த 10-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி

மேலும் 17-ந் தேதிக்குள் எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்தி கால்நடைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அறிவித்திருந்தனர். தமிழக பால் வளத்துறை அமைச்சரிடம், பால் உற்பத்தியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் நேற்று முன்தினம் பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் வழங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் பவானி அருகே உள்ள நசியனூர் ராயபாளையம் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன்பு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பொருளாளர் ராமசாமி தலைமையில் பாலை ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

2-வது நாளாக...

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் ஆப்பக்கூடல் அருகே தளவாய்பேட்டை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் முன்பு ராஜ் கவுண்டர் தலைமையில் உறுப்பினர்கள் பசு மாட்டுடன் நேற்று காலை 7 மணி அளவில் ஒன்று திரண்டனர்.

பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆப்பக்கூடல் போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். பாலை உற்பத்தியாளர்கள் ரோட்டில் கொட்டுவதை தடுக்கும் விதமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story