பொதுமக்கள் தர்ணா போராட்டம்


பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x

அன்னசாகரம் பகுதியில் குடியிருக்கும் இடங்களை பத்திரப்பதிவு செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி

அன்னசாகரம் பகுதியில் குடியிருக்கும் இடங்களை பத்திரப்பதிவு செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தடங்கல் மனு

தர்மபுரி அன்னசாகரம் தியாகி தீர்த்தகிரியார் தெருவில் 360 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குறிப்பிட்ட சில புல எண்கள் கொண்ட நிலங்கள் கோவில் நிலங்கள் என்றும், அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்றும் சிலர் தெரிவித்தனர். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையால் பதிவுத்துறையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கான தடங்கல் மனுவை நீக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் கடந்த ஆண்டு தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட புல எண்களில் பத்திரப்பதிவு செய்ய தடை ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

தர்ணா போராட்டம்

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதிகளில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த பல மாதங்களாக வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரி நேற்று பொதுமக்கள் தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த உதவி கலெக்டர் கீதாராணி, துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், தாசில்தார் ஜெயவர்மன், இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக பத்திரப்பதிவு துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக தர்மபுரி தாலுகா அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story