கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்


கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

கான்கிரீட் தளம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது. அவ்வாறு அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்று விவசாயிகளின் ஒரு தரப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதன்படி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில், ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், தாசில்தார் பூபதி ஆகியோர் விவசாயிகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

காலவரையற்ற உண்ணாவிரதம்

இந்தநிலையில் நேற்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி, நிர்வாகி சுதந்திரராசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து பெருந்துறை ஒன்றியம் திருவாச்சி ஊராட்சிக்குட்பட்ட கூரபாளையம் பிரிவு ஈரோடு ரோட்டில் ஏராளமான விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த போராட்டத்துக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயராது. அதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கோரிக்கையை விளக்கி பேசினார்கள்.

உண்ணாவிரத போராட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் இரவிலும் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


Next Story