கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை அமைப்பு; பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்
கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுத்து பணியை நிறுத்தினார்கள்.
கடத்தூர்
கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுத்து பணியை நிறுத்தினார்கள்.
கான்கிரீட் தளம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்று விவசாயிகளில் ஒரு தரப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெருந்துறை அருகே கடந்த 4 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு வணிகர் சங்கத்தினரும், அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சத்தியமங்கலம் வண்டிபாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வாய்க்காலில் 300 மீட்டர் நீளத்துக்கு இடது மற்றும் வலது கரை பக்கவாட்டில் எந்திரம் மூலம் கான்கிரீட் அமைக்கப்பட்டதாக தெரிகிறது.
பணியை நிறுத்தினர்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பணி நடைபெறும் இடத்துக்கு நேற்று காலை திரண்டு சென்றனர். பின்னர் பணிகளை உடனே நிறுத்துமாறு அங்கிருந்த பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பணியை தொடர்ந்து நடத்தவில்லை என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பின்னரே விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.