பாளையம்புதூரில் தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
நல்லம்பள்ளி
சேலத்தில் இருந்து பயணிகளுடன் ஒரு தனியார் பஸ் நேற்று தர்மபுரி நோக்கி வந்தது. இந்த பஸ் தொப்பூர் அருகே வந்தபோது, பெண்கள், பாளையம்புதூர் பஸ் நிறுத்தத்தில் நிறுத்துமாறு கூறினர். ஆனால் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் பாளையம்புதூரில் பஸ் நிற்காது. நல்லம்பள்ளியில் தான் நிற்கும் என கூறி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்கள் இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பாளையம்புதூர் பஸ் நிறுத்தத்தில் திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர், கண்டக்டரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் பஸ்சை விடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.