அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ; பேச்சுவார்த்தையில் உடன்பாடு


அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ; பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 16 Dec 2022 2:15 PM GMT (Updated: 16 Dec 2022 2:26 PM GMT)

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிலாளர் துறை, தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் நடந்தபேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது

திருப்பூர்

உடுமலை,

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிலாளர் துறை, தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் நடந்தபேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் இன்று (சனிக்கிழமை) வேலைக்கு திரும்புகின்றனர்.

கூட்டுறவு சர்க்கரை ஆலை

உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்குரிய சம்பளம் வழங்கப்படாமல் நிலுவை உள்ளது. அத்துடன் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பி.எப். தொகையை ஆலை நிர்வாகம், கடந்த 25 மாதங்களாக பி.எப். அலுவலகத்தில் செலுத்தவில்லை. அதனால் கடந்த ஒரு வருடமாக, ஓய்வு பெற்ற 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பென்சன் கிடைக்காமல் உள்ளது.

இந்த நிலையில் சம்பள நிலுவைத்தொகையை வழங்கக்கோரியும், தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பி.எப். தொகையை, பி.எப். அலுவலகத்திற்கு செலுத்த கோரியும் இந்த ஆலை மற்றும் இந்த ஆலையின் சார்பு நிறுவனமான வடிப்பாலை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த 12-ந்தேதி முதல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். நேற்று 5-வது நாளாக வேலை நிறுத்தம் நடந்தது.

உடன்பாடு

இந்த நிலையில் இந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக திருப்பூரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் துறை, தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) க.செந்தில் குமரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சர்க்கரை ஆலை அதிகாரிகள் மற்றும் சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு குழுவினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆலைத்தொழிலாளர்களின் 19 மாத பி.எப். தொகையை வருகிற 26-ந் தேதிக்குள் பி.எப்.அலுவலகத்தில் கட்டுவது. தொழிலாளர்களுகாகு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைத்தொகையில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய 2 மாதங்களுக்கான சம்பளத் நிலுவைத்தொகையை வருகிற 30-ம்தேதிக்குள் வழங்குவது. இந்த உறுதிமொழியை ஆலை நிர்வாகம் அளித்துள்ளதை ஏற்று ஆலைத்தொழிலாளர்களின் சம்பள நிலுவைத்தொகை மற்றும் பி.எப். அலுவலகத்திற்கு செலுத்தவேண்டிய தொகையை செலுத்துவது ஆகியவை குறித்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆலைத்தொழிலாளராகள் மற்றும் ஊழியர்கள் இன்று (சனிக்கிழமை) வேலைக்கு திரும்புகின்றனர்.


Related Tags :
Next Story