பலமணி நேரம் தீயை அணைக்க முடியாமல் போராட்டம்

பாறைக்குழியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பலமணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.
அனுப்பர்பாளையம்
திருமுருகன்பூண்டி அருகே பாறைக்குழியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பலமணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பாறைக்குழி
திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் கணபதிநகரில் தனியாருக்கு சொந்தமான 50 அடி ஆழம் கொண்ட பாறைக்குழி உள்ளது. அங்கு திருமுருன்பூண்டி நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பாறைக்குழியில் உள்ள குப்பை தீப்பிடித்து எரிவதாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது. இதன்பேரில் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் பாறைக்குழி ஆழமாக இருந்ததால் பலமணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து தனியார் லாரிகள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பாறைக்குழியில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டும் திருமுருகன்பூண்டி நகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு பாதிப்பு
திருமுருகன்பூண்டி நகராட்சி சார்பில் இந்த பாறைக்குழியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இங்கு தீ விபத்து ஏற்பட்ட உடன் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் நீண்ட நேரமாகியும் யாரும் வரவில்லை. மேலும் தீயை அணைப்பதற்கு தேவையான தண்ணீர் வழங்குவது போன்ற எந்த நடவடிக்கையையும் நகராட்சி செய்யவில்லை. குப்பையை சமமான இடத்தில் கொட்டினால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அணைத்து விடலாம். ஆனால் இதுபோன்ற ஆழமான பாறைக்குழியில் கொட்டும்போது தீயை அணைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. தீயணைப்புத்துறையினர் மட்டுமே சம்பவ இடத்தில் நின்று போராடி வருகின்றனர். நீண்ட நேரம் தீ எரிவதால் அதிக அளவில் புகை வெளியேறி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இனி வரும் காலத்தில் பாறைக்குழியில் நகராட்சி சார்பில் குப்பையை கொட்டினால் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இரவு 10 மணி வரை தீ முழுமையாக அணைக்கப்படவில்லை.
-






