ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்
உத்தமபாளையத்தில் கோவில் இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
உத்தமபாளையம் பஸ்நிலையத்திற்கு எதிரே உள்ள வீதியில் ஸ்ரீமாடசாமி கோவில் பீடம் அமைத்து பொதுமக்கள் வழிபாடு செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கோர்ட்டு உத்தரவுப்படி, கோவில் பீடத்தை பேரூராட்சி நிர்வாகத்தினர் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதார் அட்டைகளை உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு பா.ஜ.க. முன்னாள் மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் மோடி கார்த்திக் தலைமை தாங்கினார். உத்தமபாளையம் நகர தலைவர் தெய்வம், இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின்போது, பொதுமக்கள், பா.ஜ.க.வினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசனிடம் ஆதார் அட்டைகளை ஒப்படைத்தனர். போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க., இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.