பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்த போராட்டம்

கரூர் அருகே பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்தி விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலால் வரி குறைப்பு
மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 வீதம் குறைத்தது. இதனால் பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைந்தது. இந்தநிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததால் சில்லறை வர்த்தகத்தில் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத்தினர் நேற்று ஒருநாள் மட்டும் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என்று அறிவித்தனர்.
அதன்படி கரூர் அருகே உள்ள ஆத்தூர் பாரத் பெட்ரோலியம் முனையம் எதிரே தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒருநாள் அடையாள பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
சில்லறை விற்பனையாளர்களுக்கு இழப்பு
இதற்கு மாநில பொருளாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட பெட்ரோலிய வணிகர்கள் சங்க தலைவர் சூரியநாராயணன், திண்டுக்கல் மாவட்ட பெட்ரோலிய வணிகர்கள் சங்க தலைவர் ராமதாஸ், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 22 மாவட்டங்களை சேர்ந்த பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில் மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் சில்லறை விற்பனையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் ஈடுசெய்ய வலியுறுத்தியும், கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து இதுவரை விளிம்பு தொகை உயர்த்தப்படவில்லை. எனவே அதை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட அகில இந்திய அளவில் 24 மாநிலங்களில் நேற்று ஒரு நாள் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம் செய்யப்பட்டது என்றனர்.