டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி


டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:45 PM GMT)

புளியங்குடி அருகே பிளஸ்-1 மாணவன் இயக்கிய டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவன் உடல் சிதைந்து பரிதாபமாக இறந்தான்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி அருகே பிளஸ்-1 மாணவன் இயக்கிய டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவன் உடல் சிதைந்து பரிதாபமாக இறந்தான்.

பள்ளி மாணவன்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அரியூரை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மாரியம்மாள், மகன் மனோஜ்பாண்டி (வயது 15), மகள் முத்து (12).

நெற்கட்டும்செவல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மனோஜ் பாண்டி 10-ம் வகுப்பு படித்து வந்தான். முத்து 7-ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் இவர்களது உறவினர் ஒருவரின் மகன் பிளஸ்-1 படித்து வருகிறார்.

தவறி கீழே விழுந்தான்

நேற்று முன்தினம் மாலை பிளஸ்-1 மாணவர், அவரது உறவினரான கருத்தப்பாண்டி (40) என்பவரது டிராக்டரை அப்பகுதியில் உள்ள வயலில் ஓட்டிக்கொண்டிருந்தார்.

டிராக்டரின் பின்புறம் ரொட்டேட்டர் பொருத்தப்பட்டு வயலை உழுது கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு வந்த மனோஜ் பாண்டி, டிராக்டரின் பக்கவாட்டில் கால் வைத்து ஏற முயன்றதாகவும் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மனோஜ் பாண்டி தவறி கீழே விழுந்தான்.

பரிதாப சாவு

இதனால் டிராக்டரின் பின்பக்க சக்கரம் மற்றும் அதன் அருகே பொருத்தப்பட்டிருந்த ரொட்டேட்டர் எந்திரத்தில் அவன் சிக்கினான். இதில் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே மனோஜ் பாண்டி பரிதாபமாக இறந்தான்.

தகவல் அறிந்ததும் புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மனோஜ் பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேரை பிடித்து விசாரணை

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவர் மற்றும் டிராக்டர் உரிமையாளர் கருத்தப்பாண்டி ஆகிய இருவரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story