அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் சாதனை
அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.
காரைக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை ராஜா கலைக் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் மொத்தம் 22 கல்லூரி அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில் பெண்களுக்கான சதுரங்க போட்டியில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் முதலிடமும், ஆண்களுக்கான சதுரங்க போட்டியில் 2-வது இடமும் பெற்றனர். மேலும் போட்டியில் சிறப்பாக விளையாடிய கல்லூரி மாணவிகள் பவித்ரா, முத்து லட்சுமி, உமா சுந்தரி, அபிநயா ஆகியோர் முதல் பரிசை பெற்றனர். இதில் மாணவி பவித்ரா அழகப்பா பல்கலைக்கழக மகளிர் சதுரங்க அணிக்கு தேர்வு பெற்றார். அதேபோல் ஆண்களுக்கான சதுரங்கப் போட்டியில் மாணவர்கள் ராஜ்முகிலன், அபிலாஷ், கண்ணதாசன், விமல், முத்துக்குமார், தினேஷ் குமார் ஆகியோர் 2- வது பரிசைப் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ராஜா கலைக் கல்லூரி தலைவர் ராஜா மற்றும் செயலாளர் தில்லை ராஜ்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். பரிசு பெற்ற மாணவ-மாணவிகளை அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி மற்றும் உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார், பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.