மாணவர் சாதனை


மாணவர் சாதனை
x

வேதியியல் தனிம அட்டவணையை கூறி மாணவர் சாதனை

திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உதவி பேராசிரியரும், புற்றுநோய் சிகிச்சை சிறப்பு நிபுணருமாக பணியாற்றுபவர் பிரபுராஜ். இவருடைய மனைவி பல் மருத்துவர் ஆர்த்தி ஹரிபிரியா. இவர்களுடைய மகன் சதுர்கிரிஷ் ஆத்விக் (வயது 6). சிறுவயதிலே தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் 3 வயதில் 53 திருக்குறளை 3 நிமிடத்தில் கூறியும், 4½ வயதில் 100 திருக்குறளை 5 நிமிடம் 40 வினாடிகளில் கூறியும் சாதனை படைத்தார்.

இதனை இந்தியா புக் ஆப் ரெக்காட்ஸ், டிரயம்ப் வேல்டு ரெக்காட்ஸ், குளோபல் ரெக்காட்ஸ் அன்டு ரிசர்ச் பவுண்டேஷன் ஆகியவை அங்கீகரித்து கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கியது. மேலும் நமது நாட்டில் உள்ள மாநிலங்கள், அதன் தலைநகரங்கள், உலக நாடுகள், அதன் தலைநகரங்களையும் குறுகிய கால அவகாசத்தில் ஒப்புவித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.

தற்போது வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள 118 தனிமங்களையும் சிறுவன் சதுர்கிரிஷ் ஆத்விக் 1 நிமிடம் 33 வினாடிகளில் கூறி, ஆசிய புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்று சாதனை புரிந்தார். எனவே அவரை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பாராட்டினார்.

இதுகுறித்து டாக்டர் தம்பதி கூறுகையில், ''எங்களுடைய மகன் சதுர்கிரிஷ் ஆத்விக் பள்ளி பாடங்களை எளிதாக குறைந்த நேரத்தில் படித்து முடித்ததை பார்த்தோம். மேலும் தாய் மொழியான தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக திருக்குறள் கற்க தொடங்கினார். தினம் ஒரு திருக்குறள் கற்று கொடுத்து வருகிறோம். விரைவில் 1,330 திருக்குறளையும் குறைந்த நேரத்தில் ஒப்புவிக்கும் நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்'' என்றனர்.


Next Story