திட்டக்குடி அருகே எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; விடுதியில் தங்கி படிக்குமாறு தாய் கூறியதால் விபரீத முடிவு


திட்டக்குடி அருகே எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; விடுதியில் தங்கி படிக்குமாறு தாய் கூறியதால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 19 Jun 2023 8:37 PM GMT (Updated: 20 Jun 2023 2:05 AM GMT)

திட்டக்குடி அருகே விடுதியில் தங்கி படிக்குமாறு தாய் கூறியதால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

திட்டக்குடி,

வெளிநாட்டில் வேலை

திட்டக்குடி அருகே உள்ள பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுடைய மகள் நதியா (வயது 15), வடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இதற்காக அவர் பள்ளி விடுதியில் தங்கியிருந்து, பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த நதியா, அதன் பிறகு விடுதிக்கு செல்லாமல் கடந்த 3 நாட்களாக பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தார்.

தூக்குப்போட்ட மாணவி

இந்த நிலையில் சங்கீதா, விடுதியில் தங்கி படிக்குமாறு நதியாவை கண்டித்துள்ளார். இதில் தாய், மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது நதியா, உறவினர் இல்ல காதணி விழா முடிந்ததும், விடுதியில் தங்கி படிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத சங்கீதா, விடுதிக்கு செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.

இதனால் மனவேதனையடைந்த நதியா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கீதா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே நதியா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதியில் தங்கி படிக்குமாறு தாய் கூறியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story