'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை
ஆத்தூர்:-
ஆத்தூர் அருகே 'நீட்' தேர்வுக்கு பயந்து தனியார் பள்ளி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
'நீட்' தேர்வு பயிற்சி மையம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் 'நீட்' தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் டாக்டர் ஆகும் கனவுடன் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த பயிற்சி மையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் குன்று மேடு பகுதியை சேர்ந்த முருகன்-ரோஜா தம்பதியின் மகன் சந்துரு (வயது 18) கடந்த 2 ஆண்டுகளாக 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்தார்.
இவர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பயிற்சி மையத்துக்கு சென்று வந்தார். இவரது அறையில் திருவண்ணாமலையை சேர்ந்த பாலாஜி (18) என்ற மாணவரும் உடன் தங்கி இருந்து 'நீட்' தேர்வுக்கு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விடுமுறையையொட்டி மாணவர் பாலாஜி ஆத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனால் சந்துரு மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று காலை 11 மணிக்கு பாலாஜி பள்ளி விடுதிக்கு திரும்பினார். அங்கு தனது அறையின் கதவை திறந்து பார்த்தபோது, சந்துரு மின்விசிறி மாட்டும் கொக்கியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாலாஜி, விடுதி காப்பாளர் பிரவீன்குமாரிடம் தெரிவித்தார். மேலும் ஆத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் மற்றும் ஆத்தூர் ரூரல் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பாலாஜி, பிரவீன்குமார் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது 'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவர் சந்துரு தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
பெற்றோர் கதறல்
இதையடுத்து சந்துருவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து ஆஸ்பத்திரியில் சந்துருவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குவிந்தனர். அவர்கள் சந்துருவின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் ஒரே மகனை இழந்து விட்டோமே என்று பெற்றோர் கதறியது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
இதனிடையே சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா மற்றும் அதிகாரிகள் தனியார் பள்ளி விடுதி மற்றும் 'நீட்' பயிற்சி மையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த மாணவர்கள், பயிற்சி மைய அலுவலர்களிடமும் விசாரணை நடத்தி சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
பெரும் சோகம்
மேலும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மாணவர் சந்துரு சிவப்பு நிற டீ-சர்ட் அணிந்தபடி, மற்றொரு அறையில் இருந்து தனது அறைக்கு பிளாஸ்டிக் சேர் ஒன்றை தூக்கி செல்வதும், அதன்பிறகு கயிறை எடுத்து செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காட்சி அடங்கிய பதிவுகளை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் சந்துரு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.