கல்லூரி மாணவர் தற்கொலை: பெற்றோர் பைக் வாங்கி தராததால் விபரீத முடிவு


கல்லூரி மாணவர் தற்கொலை: பெற்றோர் பைக் வாங்கி தராததால் விபரீத முடிவு
x

ராணிப்பேட்டை அருகே கல்லூரிக்கு செல்ல பெற்றோர் பைக் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமாதலம் பாக்கம் கிராமம் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சேட்டு. விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் குமரேசன் (வயது 19). இவர் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 3 ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் குமரேசன் தன்னுடைய பெற்றோரிடம் தனக்கு கல்லூரி சென்றுவர பைக் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை தற்போது பைக் வாங்க வேண்டாம்‌. கல்லூரி படிப்பு முடிந்ததும் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

இதனால் குமரேசன் கோபமடைந்து வீட்டில் யாரிடமும் பேசாமல், சாப்பிடாமல் இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வது போல பேக் மாட்டிக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் கல்லூரி செல்லாமல் ஆட்டுப்பாக்கம் அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள வயல்வெளிக்கு சென்று பேக்கில் எடுத்து வந்திருந்த பூச்சி மருந்தை குடித்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவர் தந்தை சேட்டு நெமிலி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது


Next Story