3 மணி நேரமாக சிறுநீர் கழிக்க விடவில்லை - போலீசாரிடம் ஆசிரியர் மீது மாணவன் புகார்
தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஆசிரியர் சிறுநீர் கழிக்க விடாமல் 3 மணி நேரம் தடுத்து வைத்திருந்ததாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் தர்மசுதன் (7). இவர் அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் துவக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை தர்மசுதன் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளியில் மாணவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் தர்மசுதனை ஆசிரியர் கண்டித்தாக கூறப்படுகிறது. மேலும் மாணவனை பள்ளி வகுப்பறையில் அமர வைத்துள்ளார். மதியம் 11 மணி அளவில் இடைவேளையின் போது மாணவ மாணவிகள் அனைவரும் வெளியில் சென்று விட்டனர்.
ஆனால் தர்மசுதனை மட்டும் ஆசிரியர் விடவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதியம் உணவு இடைவேளைக்கு வீட்டிற்கு வந்த மாணவன் தர்மசுதன் தனக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில் வலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளான். பெற்றோர் அவனிடம் விசாரிக்கும் போது தன்னை மதியம் சிறுநீர் கழிக்க ஆசிரியர் அனுமதிக்கவில்லை என்று கூறி கதறி அழுதுள்ளான்.
உடனே தர்மசுதன் பெற்றோர் பள்ளிக்கு சென்று முறையிட்டுள்ளனர். ஆனால் பள்ளியில் முறையான பதில் அளிக்கவில்லை. உடனே சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்ற பெற்றோர், தர்மசுதனையும் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பள்ளியில் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து புகார் மனு அளித்தனர். அதனை தொடர்ந்து சாத்தான்குளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பள்ளி மாணவன் தர்மசுதன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.