மாணவன் விஷவாயு தாக்கி பலி


மாணவன் விஷவாயு தாக்கி பலி
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாணவன் விஷவாயு தாக்கி பலி

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் சாக்கடை கால்வாய்க்குள் இறங்கி தங்க துகள்கள் சேகரித்த போது விஷ வாயு தாக்கி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தார்.

தங்க நகை பட்டறைகள்

கோவையில் வெரைட்டி ஹால் ரோடு, செல்வபுரம், கடைவீதி, தெலுங்கு வீதி, இடையர் வீதி, சலீவன் வீதி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தங்க நகை பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் தங்க நகைகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பட்டறைகளில் தங்க கட்டிகளை உருக்கி நகைகள் செய்யும் போது சேதாரமாகும் கண்ணுக்கு புலப்படாத தங்க துகள்கள் காற்றில் பறந்து அந்த பகுதியில் உள்ள சாக்கடை நீரில் கலக்கின்றன. மேலும் தங்க நகை பட்டறைகளை சுத்தம் செய்யும் போதும் தங்க துகள்கள் தண்ணீருடன் சேர்ந்து சாக்கடையில் கலக்கின்றன.

தங்க துகள் சேகரிப்பு

இதுபோன்று சாக்கடையில் கலக்கும் தங்க துகள்களை சேகரித்து விற்பனை செய்வதை பலர் தொழிலாக செய்து வருகின்றனர். குறிப்பாக சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் கோவையில் தங்கியிருந்து நகை பட்டறை மிகுந்த பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாயில் உள்ள தங்க துகள்களை சேகரித்து விற்பனை செய்கின்றனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு தலா ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த பாலன் (வயது 40) என்பவர் உக்கடம் மைல் கார்டன் பகுதியில் தங்கியிருந்து தங்க துகள்களை சேகரித்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் (13) நாமக்கலில் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக பாலனுக்கு உடல்நிலை சரியில்லை. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

விஷ வாயு தாக்கி பலி

இதனையடுத்து தனது தந்தைக்கு உதவி செய்வதற்காக விக்னேஷ், நாமக்கல்லில் இருந்து கோவை வந்தார். இவர் கடந்த சில நாட்களாக தங்க துகள் சேகரிப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் விக்னேஷ் நேற்று அதிகாலை தனது உறவினர்கள் சிலருடன் வெறைட்டிஹால் ரோடு அருகே இடையர் வீதியும், தெலுங்கு வீதியும் சந்திக்கும் சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி தங்க துகள்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சாக்கடையில் இருந்து விஷவாயு தாக்கி விக்னேஷ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது உறவினர்கள் சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பாக வெறைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.




Next Story