தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை இன்று நடைபெறுகிறது என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர்
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை இன்று நடைபெறுகிறது என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாணவர் சேர்க்கை
வேலூர் மாவட்டத்தில் உள்ள 193 தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நுழைவுநிலை வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் இருந்தால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறைவான விண்ணப்பங்கள் இருந்தால் தகுதியான அனைத்து விண்ணப்பங்களுக்கும் சேர்க்கை வழங்கப்படும்.
பள்ளி பொதுத்தேர்வு மையமாக செயல்படாவிட்டால் மாணவர் சேர்க்கைக்கான குலுக்கல் காலையில் நடைபெற வேண்டும். பொதுத்தேர்வு மையமாக செயல்பட்டால் பிற்பகலில் குலுக்கல் நடைபெறும். வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றோர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்க வேண்டும்.
கண்காணிப்பு அலுவலர்கள்
குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் சேர்க்கைக்கு வரவில்லை என்றால் அந்த குழந்தையின் பெற்றோருக்கு செல்போன் அல்லது குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த குழந்தையை காத்திருப்பு பட்டியலில் முன்னுரிமைப்படி சேர்க்கை வழங்க வேண்டும்
தனியார் பள்ளிகளில் நடக்கும் மாணவர் சேர்க்கையானது உரிய அரசு விதிமுறைகளை பின்பற்றி நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க அரசு அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு கண்காணிப்பாளராக செல்வதை சம்மந்தப்பட்ட தாலுகா தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அரசு அலுவலர்கள் மாணவர் சேர்க்கையின்போது அரசின் விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.