விதை நேர்த்தி செய்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தலாம்


விதை நேர்த்தி செய்வதன் மூலம்   நோய்களை கட்டுப்படுத்தலாம்
x

விதை நேர்த்தி செய்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தலாம்

திருப்பூர்

போடிப்பட்டி

விதை நேர்த்தி மூலம் பயிர்களுக்கு வரும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வேளாண் மாணவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

பூஞ்சாண விதை நேர்த்தி

பயிர் சாகுபடியில் முக்கிய அம்சமாக விதைப்பு உள்ளது. சரியான பருவத்தில், சரியான இடைவெளியுடன், சரியான வழிமுறைகளைப் பின்பற்றி, தரமான விதைகளை விதைப்பு செய்வதன் மூலம் நல்ல மகசூல் ஈட்ட முடியும். அதேநேரத்தில் விதைகள் மூலம் பரவக்கூடிய பூஞ்சாண நோய்களிலிருந்து பாதுகாக்க பூஞ்சாண விதை நேர்த்தி அவசியமாகிறது. டிரைக்கோடெர்மா விரிடி என்னும் உயிரியல் பூஞ்சாணக் கொல்லியை விதைகளுடன் கலந்து பூஞ்சாண விதை நேர்த்தி செய்து பின்னர் விதைக்கலாம்.

அதிக அளவில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளால் மண்ணிலுள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள் பெருமளவு அழிந்து விட்டன. இந்தநிலையில் டிரைக்கோடெர்மா விரிடி மூலம் விதை நேர்த்தி செய்யும்போது அவை விதைகளின் துவாரங்களில் பொருந்தி பயிருடன் இணைந்து வளர்கிறது. இதன் மூலம் வேர் அழுகல், தண்டு அழுகல் உள்ளிட்ட நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.விதை நேர்த்தி செய்வதற்கு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி போதுமானதாகும்.

குறையும் உரச்செலவு

உயிரி விதை நேர்த்தி செய்வதன் மூலம் உரச் செலவை பெருமளவு குறைக்க முடியும். உதாரணமாக விளைநிலத்தில் இடும் பாஸ்பேட் எனப்படும் மணிச்சத்தில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் மட்டுமே பயிர்களால் கிரகிக்க முடிகிறது. மீதமுள்ளவை நிலத்திலேயே தங்கி விடுகிறது. இவ்வாறு கரையாமலிருக்கும் சத்துக்களைக் கரைத்துக் கொடுக்க உயிர் உர நேர்த்தி உதவுகிறது. ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை சோறு வடித்த கஞ்சியுடன் கலந்து உயிர் உர விதை நேர்த்தி செய்யலாம்.

இந்தவகை விதை நேர்த்தியை விதைப்புக்கு அரை மணி நேரம் முன் செய்வது சிறந்த பலன் தரும். இந்தநிலையில் கிராமப்புற விவசாய வேலை அனுபவ பயிற்சி திட்டத்தின் மூலம் உடுமலை வந்துள்ள கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமளித்தனர். மேலும் விதை நேர்த்தி மூலம் நோய்களைக் கட்டுப்படுத்தி, பயிர் வளர்ச்சியை அதிகப்படுத்தி 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் ஈட்டலாம் என்று கூறினர்.

-


Next Story