என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய மாணவர்.. காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சின்னசேலம் அருகே கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம்,
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 53). இவர் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அன்பரசி. இவர்களது மகன் அபித்குமார் (18).
இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இதற்காக கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். விடுமுறை தினங்களில் மட்டும் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 15-ந்தேதி சுதந்திர தின விடுமுறைக்காக சொந்த ஊருக்கு அபித்குமார் சென்றார். பின்னர், நேற்று முன்தினம் இரவு கல்லூரி விடுதிக்கு திரும்பிய அவர், சக மாணவர்களுடன் அறையில் தங்கியிருந்தார்.
பின்னர் நேற்று காலை விடுதியில் சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்கு சென்றார். அப்போது, வகுப்பறையில் இருந்த விரிவுரையாளர் ஒருவர், செமஸ்டர் தேர்வு வருகிற, 21-ந்தேதி தொடங்க உள்ள நிலையில், இத்தனை நாள் விடுமுறையில் இருந்துவிட்டு வருகிறாயே? என்று கேட்டு, துறை தலைவரை போய் பார்த்துவிட்டு வருமாறு கூறியுள்ளார். அங்கிருந்து அபித்குமார் திரும்பி சென்றார்.
இந்த நிலையில், விடுதியில் தான் தங்கியிருந்த அறையில் அபித்குமார் மின்விசிறியில் கயிற்றால் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்தவர்கள், உடனடியாக விடுதி மற்றும் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர்கள் ராஜாராமன், பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், மாணவரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இறந்த மாணவரின் தந்தை பழனிசாமி சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள் 3 பேர், விடுதி காப்பாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அபித்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?, அவரது சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.