அரசு ஐ.டி.ஐ.-பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாணவர் விடுதிகள் திறப்பு
அரசு ஐ.டி.ஐ.-பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாணவர் விடுதிகள் திறக்கப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் மூலம் தண்ணீர் பந்தலில் உள்ள பெரம்பலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்துக்கு (ஐ.டி.ஐ.) செங்குணத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசு பிற்படுத்தப்பட்டோர் தொழிற்பயிற்சி மாணவர் விடுதி கட்டிடம் மற்றும் கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு, அதே பகுதியில் ஏற்படுத்தப்பட்ட அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் தொழில்நுட்ப மாணவர் விடுதி கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாக்களுக்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விடுதிகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்து, விடுதிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தங்கி பயில்வதற்கு வசதியாக தலா 100 மாணவர்கள் தங்கி பயில 2 மாணவர் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த 2 விடுதிகளும் தற்போது தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் அரசு ஐ.டி.ஐ. மாணவர் விடுதிக்கு 41 விண்ணப்பங்களும், கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் விடுதிக்கு 113 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும், என்றார்.