அரசு பள்ளியின் சுவர் பெயர்ந்து விழுந்து மாணவர் காயம்


தினத்தந்தி 27 Oct 2022 7:15 PM GMT (Updated: 27 Oct 2022 7:15 PM GMT)

நன்னிலம் அருகே அரசு பள்ளியின் சுவர் பெயர்ந்து விழுந்ததில் மாணவர் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

திருவாரூர்

நன்னிலம் அருகே அரசு பள்ளியின் சுவர் பெயர்ந்து விழுந்ததில் மாணவர் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அரசு பள்ளியின் சுவர் பெயர்ந்து விழுந்தது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருவாஞ்சியம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று தற்போது பழுதடைந்து காணப்படுகிறது.

இதனை இடிப்பதற்கு அரசாணை வழங்கப்பட்டு உள்ளது. இடியும் நிலையில் உள்ள இந்த கட்டிடம் தற்போது பயன்பாட்டில் இல்லை. நேற்று காலை பள்ளி வளாகத்தில் இறை வணக்கம்(பிரேயர்) நடந்தது. அப்போது அந்த பழுதடைந்த கட்டிடத்தின் ஓரத்தில் பருத்தியூரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் தயாளன்(வயது 15) நின்று கொண்டு இருந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்த நிலையில் பழுதடைந்த கட்டிடத்தின் சுவரில் இருந்து சிமெண்டு காரைகள் திடீரென பெயர்ந்து தயாளன் தலையில் விழுந்தன. இதில் படுகாயம் அடைந்த அவரை பள்ளி ஆசிரியர்கள் நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி வளாகத்தில் இருந்த கட்டிடத்தின் சுவரில் இருந்து சிமெண்டு காரைகள் திடீரென பெயர்ந்து விழுந்து மாணவர் காயம் அடைந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story