ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்த மாணவன் படுகாயம்


ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்த மாணவன் படுகாயம்
x

பஸ்சை நிறுத்துங்கள் என்று கெஞ்சியும் நிறுத்தாததால் ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்த மாணவன் படுகாயம் அடைந்தான்.

திருப்பூர்

பெருமாநல்லூர்

குன்னத்தூர் அருகே பஸ்சை நிறுத்துங்கள் என்று கெஞ்சியும் நிறுத்தாததால் ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்த மாணவன் படுகாயம் அடைந்தான்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி மாணவன்

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அடுத்த அணைப்பதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி பிரியா. இவர்களது மகன் விஷ்ணு (வயது 10). குன்னத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். அணைப்பதியில் இருந்து தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்தான்.

குன்னத்தூரில் இருந்து தடம் எண்-10 அரசு பஸ்சும், தடம் 10 ஏ அரசு பஸ்சும் திருப்பூருக்கு இயக்கப்படுகிறது. இதில் தடம் எண் 10 ஏ பஸ் குன்னத்தூரில் புறப்பட்டு அணைப்பதி, பெருமாநல்லூர் வழியாக திருப்பூர் செல்லும். தடம் எண் 10 பஸ்சானது குன்னத்தூரில் புறப்பட்டு ஆதியூர், பெருமாநல்லூர் வழியாக (அணைப்பதி போகாது) திருப்பூர் சென்று சேரும்.

பஸ்சில் கூட்டம்

நேற்று முன் தினம் மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்கு செல்வதற்காக குன்னத்தூர் பஸ் நிலையத்திற்கு விஷ்ணு வந்தான். அப்ேபாது அங்கு தடம் எண் 10 டவுன் பஸ் நின்று கொண்டிருந்தது. அதில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாணவன் விஷ்ணு, அவசரத்தில் அணைப்பதி வழியாக செல்லாத தடம் எண் 10-ம் நம்பர் ஏறியுள்ளான். சிறிது தூரம் சென்றதும் பஸ் வேறு தடத்தில் செல்வதை பார்த்த சிறுவன் அதிர்ச்சியடைந்து பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் கெஞ்சினான். பலமுறை கூறியும் பஸ்சை நிறுத்தாமல் சென்றதால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த விஷ்ணு ஓடும் பஸ்சில் இருந்து கீேழ குதித்தான்.

ஆஸ்பத்திரில் சிகிச்சை

இதில் அவன் பலத்த காயமடைந்து வலியால் துடித்தான். உடனே அப்பகுதி பொதுமக்கள் அவனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து குன்னத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவனிடம் விசாரணை நடத்தினர். அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பஸ்சில் பணியில் இருந்த டிரைவர்-கண்டக்டர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ்சை நிறுத்தாததால் பள்ளி மாணவன் பஸ்சில் இருந்து குதித்த சம்பவம் குன்னத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

----


Next Story